Friday, August 14, 2009

லஜ்ஜையை விட்டு கஜ்ஜையை கட்டு!

தாத்தாவிடமிருந்து அப்படியே அப்பாவிற்கு வந்த சொத்து இந்த பஜனை ப்ரியம். அதனால் சிறு வயதிலிருந்தே ராதா கல்யாணம்,ருக்மிணி கல்யாணம் என்று விடாமல் எல்லா தெய்வ கல்யாணங்களுக்கும் எங்களையும் கூட்டிக் கொண்டு போய் விடுவார் அப்பா. நாங்களும் அங்கு வரும் கூட்டம் மற்றும் வயதான மாமாக்கள் நடனமாடுவதை பார்த்து சிரிக்க சலித்து கொள்ளாமல் கிளம்பிவிடுவோம்.பின்னர் கடவுளிடமிருந்த பயம் கொஞ்சம் பக்தியாக(!) உருவெடுத்து பஜனை பாட்டுக்களையெல்லாம் மனப்பாடம் செய்து பாடும் அளவு முன்னேறினேன்.

ஐந்தாவது ஆறாவது படிக்கும் காலத்தில் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு தோழிகளோடு வீட்டிலேயே வெள்ளிக் கிழமை பஜனை.எங்கள் வீட்டு பின் பக்க வெராண்டாவில் என்று தீர்மானம்.இதில் என்ன வேடிக்கை என்றால்,"பகவான் தூணிலும் இருப்பார் துறும்பிலும் இருப்பார்" என்பதை ஏற்று,பக்கத்து வீட்டு சாயி லக்ஷ்மியுடன் சேர்ந்து ஒரு கூழாங்கல்லை தேடி பிடித்து நன்றாக அலம்பி அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு அதையே பிள்ளையாராக சிறிய பலகையின் மீது ஆவாகனம். நாங்களெல்லாம், கஜானனா,ராதே ராதே, கோபாலா கோபாலா போன்ற சிறு சிறு பஜனை பாடல்களை பாடிக்கொண்டு இருக்கும் பொழுது சாயி மட்டும் பெரிய பாடல்களாக பாடுவாள்.அவள் பாடும்"திருப்பதி மலை வாழும் வெங்கடேசா" எங்களுக்கெல்லாம் ரொம்ப பிடித்த பாடல். ஏனென்றால் அந்த பாட்டை பாடும் போது பக்தி மிகுதியால் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழியும்!அதை பார்த்தவுடன் சில சமயம் எங்களுக்கும் கண்கள் கலங்கிவிடும்.யாருக்கெல்லாம் கண் கலங்கியதோ அவர்கள் எல்லாம் ஒரு விதப் பெருமையோடு கண்களை துடைத்துக் கொள்வோம்."ப்ச்" என்று சத்ததோடு மற்றவர்கள் கையை பிடித்து அழுத்துவார்கள். இந்த பக்தி நாடகம் ஒவ்வொரு வாரமும் வெற்றிகரமாக போய் கொண்டிருந்தது. வேறு என்ன பாட்டு விட்டு போனாலும் எங்கள் லிஸ்டில் கண்டிப்பாக அந்த பாட்டு இருக்கும்!

இப்படியாக போய் கொண்டிருந்த எங்கள் பஜனை மடத்திற்கு அருண் என்ற பேரில் வந்தது வினை. இவன் சித்ரா, அனு வின் உறவுகாரப் பைய்யன். எங்கள் வயசுதான்.கொஞ்சம் ஆஜானுபாகுவான உடல்வாகு. எங்கள் பஜனையில் சேர எல்லாத் தகுதியும் பெற்றவனாக இருந்தான்."கஜானம்" என்று ஆரம்பித்து மட மட என்று பல ச்லோகங்களை சொல்லுவான்."வீர மாருதி கம்பீர மாருதி" என்று அவன் பங்குக்கு கம்பீரமாக பஜனை கூட்டங்களில் பாடுவான்.ரொம்ப சுவாதினமாகவே எங்கள் பெண்கள் மத்தியில் பழகினான்.

இதற்கு நடுவில் திடீரென்று இத்தனை நாளாய் கடவுளுக்கு நைவேத்தியம் செய்யாமல் பட்டினி போட்டு வந்திருக்கிறோம் என்பது உரைக்க எல்லாரும் ஒன்று கூடி சக்கரை பொங்கல் நைவேதியம் செய்ய முடிவு செய்தோம்.சாயி லக்ஷ்மிக்குதான் கூடுதல் பக்தி என்பதால் அவள் கொண்டு வருவது என்று முடிவாயிற்று. அடுத்த வெள்ளியும் வந்தது சாயி லக்ஷ்மி சின்ன அலுமினிய டப்பாவில் ரொம்ப சாமர்த்தியமாக சாதத்தில் வெல்லத்தை தூவி கொண்டு வந்திருந்தாள்! எங்கள் பஜனையும் ஆரம்பித்தது வழக்கம் போல் எல்லாப் பாட்டுக்களும் பாடி முடித்து எங்கள் ப்ரத்யேகப் பாட்டான "திருப்பதி மலை வாழும்"விற்கு வந்தோம். அருண் ஏற்கனவே பாடி முடித்திருந்தான்.முதல் முறையாக நைவேதியம் செய்து "சாப்பிட" போகிறோம் என்ற எதிபார்ப்பு வேறு.சாயி " அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்" என்று ஆரம்பித்தவுடன் நாங்களெல்லாம் ஆவலுடன் அவள் கண்களையே பார்த்து கொண்டிருந்த வேளையில் அருண் எழுந்து நின்று தலையை ஒரு மாதிரி ஆட்டிக்கொண்டே உடம்பை முறிக்க ஆரம்பிக்கவும் சித்ரா அய்யய்யோ அவனுக்கு "சாமி வந்துடுச்சுன்னு" கத்தவும் சரியாக இருந்தது.சாயி அப்படியே திறந்த வாய் மூடாமல் பார்க்க எனக்கு வயிற்றுக்கொள் பயம் கவ்வ அம்மா! அம்மா! என்று கத்த சித்ராவும் அனுவும் அவர்கள் அம்மாவை கூட்டி வர ஓடினார்கள்.அதற்குள் என் அம்மா அவனை உட்கார வைத்து தண்ணி குடுக்க அவன் என்னமோ ஒன்றுமே நடக்காதது போல் தண்ணியை வாங்கி குடித்துவிட்டு கொஞ்சம் திருநீரை வாங்கி இட்டுக் கொண்டு கிளம்பி போனான்.அப்புறம் என்ன பஜனையாவது ஒண்ணாவது.அடுத்த வந்த நாட்களில் சாமி இருக்கும் இடத்தை கண்டாலே பேயை கண்டதுபோல் பயந்தது என்னவோ உண்மை!