Sunday, November 16, 2008

வெந்து தணிந்தது காடு + Twilight series!

ஆமாங்க நேற்று முன் தினம் ஆரம்பித்த இந்த காட்டு தீ தென் கலிஃபோர்னியா மாநிலத்தில பல ஆயிரம் ஏக்கர்களை கண்டபடி கபளீகரம் செய்துகொண்டு இருக்கிறது. தென் கலிஃபோர்னிய மாநிலத்தில் இந்த காட்டுத் தீ அபாயம் உண்டு ஆனால் அதை இவ்வளவு சமீபத்துல பார்த்தது இந்த முறைதான்.

நேற்று காலை டிவி யை ஆன் செய்துவிட்டு வெளியில் செய்தி தாள் எடுக்க போன போதே காற்றில் ஒருவித வாசனை கொஞ்சம் தூரத்தில் புகை மூட்டம் தெரிந்தது. உடனே உள்ளே வந்து டிவியில் செய்தி பார்க்க உட்கார்ந்தேன்.லாஸ் ஏஞ்சலிஸ் கவுண்டியிலும் ஆரஞ்சு கவுண்டியிலும் காட்டு தீ பரவி வருவதை காட்டி கொண்டிருந்தார்கள்.சிறிது நேரத்திற்குள் நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து பதினைந்து மயில் தூரத்தில் கட்டுக்கங்காத தீ பரவி வருவது புரிந்தது. அதை கட்டுப்படுத்த தீ அணைப்பு படை படாத பாடு பட்டு கொண்டிருந்தார்கள்.தீ சிறு சிறு குன்றுகள் மேல் இருக்கும் மில்லியன் டாலர் வீடுகளை பதம் பார்க்க பார்க்க இங்கு எங்களுக்கு ஒரே பதட்டம். வெளியில் சென்று ஏதாவது சேதி கிடைக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தோம். காற்று வேறு விர் விரென்று அடித்துக் கொண்டு இருந்தது. இதற்கு ஸாண்டா ஆனா விண்ட்ஸ் என்று பெயர்.இது மேலும் தீயை வேகமாக பரவ வைத்துக் கொண்டிருந்தது. அதற்குள் பக்கத்து வீடுகளில் இருக்கும் அத்தனை மக்களும் கூட்டம் கூட்டமாக சேர. எல்லோரும் வெளியில் நின்று கொண்டு ஒருத்தரை ஒருத்தர் சமாதானம் படுத்திக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று பேச ஆரம்பித்த வேளையில், எங்கள் கம்யூனிடி வாலண்டரி இவாகுவேஷன்(voluntary evacuation) ஏரியவிற்குள் வந்துவிட்டதாக ட்ரக்கை ஒட்டிவந்த பெண்மணி அறிவித்து போனாள். உங்களுக்கு வேண்டிய இன்றியமையாத சாமான்களை பெட்டிகளுக்குள் போட்டு ரெடியாக இருக்குமாறு சொல்லிவிட்டு இஷ்டப்பட்டவர்கள் இப்பவே கிளம்பி பக்கத்தில் இருக்கும் இவாகுவேஷன் ஷெல்டெருக்கு போகுமாறு சொல்லிவிட்டு போனாள். உடனே நாங்கள் திபு திபுவென்று உள்ளே ஓடி சென்று தோணியவற்றை எல்லாம் எடுத்து பெட்டுக்குள் அடைக்க தொடங்கினோம்.இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தமான மஹா பெரிய பெட்டிகளை எடுத்து முக்கியமான சாமன்களை போட்டு கராஜில் கொண்டு வைத்துவிட்டோம்.ஆனால் ஆசை ஆசையாக வாங்கின வீட்டை விட்டு செல்ல மனம் வருமா? என்ன செய்வது என்று புரியாமல் திரும்பவும் வாசலுக்கு உள்ளுக்குமாய் நடை பழகினோம். அதற்குள் நாங்கள் இருக்கும் ஊரில் எரிந்து கொண்டிருந்த தீயும் அடுத்து உள்ள ஊரின் தீயும் ஒன்றாக சேர்ந்து இன்னும் கொழுந்துவிட்டு எரிவதை டிவியில் பார்த்து திகில் அடைந்து பெட்டிகள் எல்லாவற்றையும் காரில் ஏற்றிவிட்டு மாண்டடரி இவாகுவேஷன் (Mandatory evacuation)சொன்னால் மட்டுமே கிளம்புவது என்று அக்கம் பக்கத்தில இருக்கற எல்லொரும் சேர்ந்து முடிவெடுத்தோம்.ஆனால் எல்லோரும் அவர் அவர் பொருள்களோடு ரெடியாக இருந்தோம். புகை மண்டலமா கிளம்பி மேலே எழும்புவதும், தீ அணைப்பு மற்றும் காவல் துறையின் சைரன் போட்ட வண்டிகளும் போவதும் வருவதும் ஒன்றுமே புரியவில்லை. அதற்குள் இரண்டு வீடு தள்ளி ஒருவர் கூரை மீது ஏரி தண்ணீர் பீய்ச்சி அடிக்க ஆரம்பிக்கவும் நாங்கள் போய் அனாவசியமாக தண்ணீர் செலவழிக்க வேண்டாம்....இம்மாதிரி செய்வதால் தீ அணைப்பு படைக்கு போதுமளவு தண்ணீர் அழுத்தம் கிடைக்காது என்று சொல்லி ஒரு மாதிரி சமாளித்து அவரை இறக்கினோம்.(இதை பற்றி டிவியில் அறிக்கை விட்டிருந்தார்கள்). நிறைய வீடுகளில் சாயந்திரத்தில் ஆட்டோமாடிக் ஸ்ப்ரிங்ளெர் தண்ணீர் பாய்ச்ச அதை ஓடி போய் சொல்லி அணைத்து எங்களால் ஆன உதவியை செய்தோம். புகையினால் சூரியனே சிகப்பாக மாறி இருந்தான்.வெப்பமோ 90 டிகிரிக்கு மேல் போய்விட்டது.காத்திருக்க தொடங்கினோம்.நடு நடுவே நண்பர்கள், உறவினர், இந்தியா ஃபோன்.எல்லோருக்கும் நிலைமையை சொல்லி கவலைபட வேண்டாமென்று சொல்லிகொண்டே கவலைபட்டுக்கொண்டிருந்தோம். இருட்ட ஆரம்பித்தவுடன் சரி ஓருத்தர் மாற்றி ஒருத்தர் சுழற்ச்சி முறையில் பார்த்துக்கொள்ளலாமென்று முடிவெடுத்து இரவு முழுக்க பார்த்துக்கொண்டோம்.தீ கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் ஊரை விட்டு தள்ளி போய்விட்டது......இன்னும் சில இடங்களில் முழு கட்டு பாடில் இல்லை. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பல நூறு வீடுகளையும் நிமிஷமாய் இந்த அக்னி விழுங்கியதை பார்த்தவுடன் இயற்கையின் சீற்றத்தை நன்கு உணர முடிந்தது. தன்னுயிரை துச்சமாக மதித்து தீயுடன் போராடிய தீ அணைப்பு படையினருக்கு ஒரு பெரிய சல்யூட்! 1961 ல் வந்த லாஸ் ஏஞ்சலிஸ் பெல்- ஏர் பகுதி தீ க்கு பின்னர் மிக்க சேதத்தை ஏற்படுத்தி உள்ளது இதுதானாம்.இன்னும் வெளியில் காற்று புகையோடுதான் உள்ளது. வீட்டு கூரை வெளியே எல்லாம் ஒரே சாம்பல். வீட்டை இழந்து பொருளை இழந்து நிற்பவர்களை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது...oh we were this close!

அடுத்தது காட்டு தீயை போல டீனேஜர்களின் மத்தியில் பரவி வருவது இந்த புத்தகம்தான்.இது ஹாரி பாட்டெரை போல ஒரு தொடர் நாவல் வகையை சார்ந்தது. இந்த தொடரின் முதல் புத்தகத்தை(Twilight by Stephanie Meyers) ஒட்டி எடுக்க பட்டுள்ள திரைபடம் நவெம்பெர் 21 ர்லீஸ்......இங்கு ஒரே அல்லோலகல்லோல படுகிறது. இந்த புத்தகத்தை பற்றி எனக்கு தோன்றியவற்றை பின்னர் எழுதுகிறேன்...இப்பொழுது தூக்கம்..:)